விபத்தில் கைகளை இழந்த இளம்பெண்… பொருத்தப்பட்ட ஆணின் கைகள்: நடந்த எதிர்பாராத அற்புதம்!

3170

விபத்து ஒன்றில் தன் கைகள் இரண்டையும் இழந்த ஒரு இளம்பெண்ணுக்கு, மயிரடர்ந்த ஆணின் கைகள் பொருத்தப்பட்ட நிலையில், அந்த கைகள் தானாகவே பெண் கைகளாகவே மாறிய அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரேயா சித்தனாகவுடர் (18) பேருந்து விபத்தொன்றில் தன் இரு கைகளையும் இழந்தார்.

இந்தியாவைப் பொருத்தவரை யாரும் தங்கள் அன்பிற்குரியவர்கள் இறந்தால், அவர்களது கைகளை தானமாக கொடுத்துவிட்டு, கைகளில்லாமல் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய விரும்பமாட்டார்கள் என்பதால், ஷ்ரேயாவுக்கு மாற்று கைகள் கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்தது.

அதிர்ஷ்டவசமாக இறந்த ஒருவரது உறவினர்கள், அவரது கைகளை தானம் செய்ய முன்வந்தார்கள். ஆனால், அவை ஒரு ஆணுடைய கைகள்.

அந்த கைகள், கருப்பாகவும், பெரியதாகவும், மயிரடர்ந்தவையாகவும் இருந்தும், மனமுவந்தும் மகிழ்ச்சியுடனும் அந்த கைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தார் ஷ்ரேயா.

ஆனால், அந்த அபூர்வ, 13 மணி நேர கை மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் மருத்துவர்களே எதிர்பாராத ஒரு பெரிய அற்புதம் நிகழ்ந்தது.

ஆம், அந்த ஆணின் கைகள் மெல்ல, மென்மையான மிருதுவான தோல் உடைய பெண் கைகளாக மாறின.

அத்துடன், கருத்திருந்த அந்த கைகள், அப்படியே ஷ்ரேயாவின் கைகளின் நிறத்துக்கும் மாறின.

அந்த கைகளை நேசிக்கத் தொடங்கிவிட்ட ஷ்ரேயா, அதே கைகளுடன் சமீபத்தில் தனது கல்லூரி தேர்வுகளையும் எழுதியுள்ளார்.

ஷ்ரேயா, எனது பிறந்த நாள் அன்று, தனது கைப்பட ஒரு பிறந்த நாள் வாழ்த்தை எழுதி எனக்கு பரிசாக கொடுத்தாள் என்று கூறும் சுப்ரமணிய ஐயர், ஷ்ரேயாவின் கைகளை அறுவை சிகிச்சை செய்து பொருத்திய மருத்துவர்களில் ஒருவர், அதுதான் என் வாழ்நாளிலேயே என்னால் மறக்கமுடியாத தருணம் என்கிறார்.

என்னால் அதைவிட சிறந்த ஒரு பிறந்த நாள் பரிசை பெற்றிருக்கவே முடியாது என்கிறார் அவர்.