பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

423

பிரித்தானிய சுகாதார அமைச்சர் Nadine Dorries-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

62 வயதான Nadine Dorries வெள்ளிக்கிழமை தமக்கு அறிகுறிகள் இருப்பதை உணர்ந்ததாகவும், செவ்வாய்க்கிழமை இரவு அது உறுதி செய்யப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருப்பதாகவும், ஆனால் தமது நோய் அறிகுறிகளில் இருந்து அவர் குணமடைந்து வருவதாகவும் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்துள்ளார் சுகாதார அமைச்சர் Nadine Dorries.

தற்போது அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அச்ச அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் எகிறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான முக்கிய குழுவில் Nadine Dorries இடம்பெற்றுள்ளதால்,

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, அமைச்சர் Nadine Dorries கொரோனா பாதிப்புக்கு உள்ளானதில் இருந்து அவர் தொடர்பு கொண்ட அனைவரையும் அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் எவரேனும் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்டால் அவர்களையும் உடனடியாக சோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் பரவுவதால் பிரித்தானிய பாராளுமன்றம் மூடப்பட வேண்டிய அச்சத்தை இந்த செய்தி தூண்டலாம் என கூறப்படுகிறது.

திருமதி டோரிஸ் கடந்த வாரம் நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்துள்ளார். இதில் ஏராளமான எம்.பி.க்கள் உட்பட, வெஸ்ட்மின்ஸ்டருக்கு வெளியே ஒரு மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஒரே நாளில் புதிதாக 63 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 383 என அதிகரித்துள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை கொரோனா பாதிப்புக்கு மரணமடைந்தவர்கள் 6 பேர் என தெரியவந்துள்ளது.