இலங்கை, லண்டனில் இருந்து தமிழகம் வந்து மோசமான செயலில் ஈடுபட்ட மூன்று தமிழ்ப்பெண்கள்! திடுக்கிடும் பின்னணி

2053

இலங்கை, லண்டன் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரபலமான கோவிலுக்கு திருவிழா நேரத்தில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று தமிழ்ப்பெண்கள் வசமாக சிக்கியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்துமதி, பராசக்தி, செல்வி ஆகிய மூன்று சகோதரிகளின் பூர்வீகம் தமிழகம் ஆகும்.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஆளுக்கு ஒரு தேசமாக பிரிந்துள்ளனர். பராசக்தி இலங்கையிலும், செல்வி கணவருடன் லண்டனுக்கும், இந்துமதி கணவருடன் கேரள மாநிலத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆனால் திருமணத்துக்கு முன்னரே திருடுவதை வழக்கமாக கொண்ட மூவரும் திருமணத்துக்கு பின்னரும் அதை விடவில்லை.

மூன்று சகோதரிகளின் திருட்டுக்கும் மூலவராக இந்துமதியின் கணவர் பாண்டியராஜன் இருந்துள்ளார்.

கேரளாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாண்டியராஜன், இணையதளம் வாயிலாக கோவில் திருவிழாக்களை தெரிந்து கொண்டு எந்தெந்த கோவில்களில் திருட போகிறோம் என்பதை முன் கூட்டியே மெயில் மூலம் பராசக்திக்கும் செல்விக்கும் அனுப்பிவிடுவார்.

இரு சகோதரிகளும் சுற்றுலா விசாவில் அங்கிருந்து சென்னை வந்ததும். பாண்டியராஜன் தனது மனைவி இந்துமதியுடன் அவர்கள் இருவரையும் சேர்த்து எந்த கோவிலில் கைவரிசை காட்ட போகின்றனரோ அங்கு அழைத்து சென்று விடுவார் என்று கூறப்படுகின்றது.

கோவில் திருவிழாவுக்கு முந்தைய நாள் அங்கு சென்று சாமி கும்பிடுவது போல நோட்டமிட்டு வருவார்கள்.

மறு நாள் கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்ததும் கழுத்தில் அதிக நகைகள் அணிந்திருக்கும் பெண்களுக்கு பின் பக்கம் அடுத்தடுத்து நின்று கொள்வார்கள்.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க சங்கிலிகளை பெண்களின் கழுத்தில் இருந்து மூவரும் திருடி எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிப்பார்கள்.

இதன் பின்னர் நகைகளை விற்று அதில் வரும் பணத்தை பங்கிட்டு கொள்வார்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு திருவிழாவுக்கு குறைந்தது 100 சவரன் நகைகளையாவது கழட்டிச்செல்லும் இந்த சகோதரிகள், கடந்த மாதம் பழனியில் தொடங்கி திருச்செந்தூரில் புகுந்து கோவையில் கைவரிசை காட்டி தப்ப நினைத்த போது சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் 15 சவரன் நகைகளுடன் பாண்டியராஜன் தப்பி சென்று விட்டார்.

பல ஆண்டுகளாக இந்த திருட்டு வேலையில் ஈடுபட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.