பயமுறுத்தும் அல்சர்- எந்த உணவுகளை சாப்பிடுவது? எதை தவிர்ப்பது?

381

சாதாரணமாக நாம் அலட்சியமாக நடந்து கொள்ளும் விஷயங்களில் முக்கியமான ஒன்று நமது உணவுப் பழக்கம், சரியான நேரத்தில் சாப்பிட்டு வருவதன் மூலமே நாம் பல நோய்களை விரட்ட முடியும்.

அவ்வாறு இல்லாமல் போகும்போது பல நோய்கள் நாம் அழைக்காமலே நம்மை வந்து சேரும், அதில் ஒன்றுதான் அல்சர்.

ஆரம்பத்தில் சிறிய வயிற்று வலியாகக் காணப்படும் இதன் அறிகுறியை அலட்சியப்படுத்தினோம் என்றால் இறுதியாய் புற்று நோய் வரை கொண்டு செல்லும் வலுவுடையது.

அல்சர் என்றால் என்ன அது வராமல் தடுக்கவும் வந்தபின் காக்கவும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

அல்சர் என்பது என்ன?

நம்ம வயிற்றில் உள்ள சிறுகுடல் சுவர்களில் ஏற்படக் கூடிய புண்கள்தான் அல்சர். அதாவது பசி எடுக்கும்போது ஒருவித அமிலம் சுரக்கின்ற உணர்வு நம்ம அனைவருக்குமே இருக்கும்.

அதை அலட்சியப்படுத்திவிட்டு தாமதமாக சாப்பிடுவோம், ஆனால் வயிறோ தன்னுடைய செரியமான வேலையை ஆரம்பித்துவிடும்.

இதனால் மியூக்கஸ் மெம்ப்ரேன் என்ற மென்மையான சவ்வு அழிந்துவிடுகிறது, இங்கு இருந்து தான் அல்சர் ஆரம்பமாகிறது.

ஆனாலும் இதை தாண்டி சில காரணங்கள் உண்டு, ஹெச் பைலோரி என்ற கிருமி தாக்கினாலும் அல்சர் வரலாம்.

இந்தக் கிருமி சுகாதாரமற்ற நிலையில் இருக்கக் கூடிய எந்த உணவை சாப்பிட்டாலும், நீர் குடித்தாலும், ஏன் இருமல் மூலமாக காற்றின் வழி கூட பரவ வாய்ப்புண்டு, உணவுக்கு பதிலா காபி டீ குடிப்பதாலும் அல்சர் வருகிறது.

இதுதவிர மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வது, அதிகமான குளிர்பானங்கள் அருந்துவது, அதிகளவில் காரமான பொருட்களை எடுத்துக்கொள்வது, மது பழக்க வழக்கத்தினாலும் அல்சர் வரலாம்.

ஆரம்ப கால அறிகுறிகள்
 • அடிக்கடி குமட்டல்.
 • ஒரு மாதிரியான புளித்த ஏப்பம்.
 • வயிறு உப்புசம்.

ரத்த வாந்தி கூட சில சமயம் ஏற்படலாம், புண்கள் அதிகம் இருக்கும் போது இது நடக்க வாய்ப்புண்டு.

மலம் கருப்பு நிறத்தில் வெளியேறினால் தவறாமல் மருத்துவரை பார்ப்பது அவசியம்.

சிகிச்சை முறைகள்
 • இரைப்பை என்டோஸ்கோபி
 • பயாப்சி என்கிற திசு ஆய்வு பரிசோதனை
 • ரேபிட் யுரியஸ் பரிசோதனை
 • அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

பேரியம் எக்ஸ்ரே மற்றும் வயிற்று எக்ஸ்ரே போன்றவைகளை மருத்துவரின் கலந்தாலோசனையின் பெயரில் செய்து அல்சர் இருப்பதை அது எந்த நிலையின் இருப்பது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?
 • நிறைவான தூக்கம், நல்ல ஓய்வு.
 • புகைப்பிடிப்பது, மது அருந்துவரை நிறுத்த வேண்டும்.
 • அதிகளவான காபி, டீ பானங்களை அருந்தக்கூடாது.
 • எண்ணெயில் பொரித்த, காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • மூன்று வேளை உணவை ஆறு வேளையாக பிரிந்து உண்ணலாம்.
 • அதிக சூடான உணவுகளை தவிர்த்துவிட்டு குளிர்ச்சியான, மிதமான உணவுகளை உட்கொள்வது.
உணவுகள்
 • வாழைப்பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள்
 • தயிர் அதிலிருந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி
 • தேங்காய் பால், மணத்தக்காளி கீரை வகைகள்
 • சோயா பீன்ஸ், ப்ராகோலி
 • ஆப்பிள், கிரீன் டீ
 • தேன், பூண்டு

இயற்கை முறைப்படி சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்கி நிதானமான முறையில் வாழ்க்கையை நடத்தினாலே ஆரோக்கியமான முறையில் வாழலாம்.