நடிகர் ஆனந்த்ராஜ் தம்பி தற்கொலையில் திடீர் திருப்பம்! அண்ணனை கைது செய்த பொலிசார்

1429

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி திருமுடி நகரைச் சோ்ந்தவா் கனகசபை (50). திருமணம் ஆகவில்லை. தொழிலதிபரான இவா், நடிகா் ஆனந்தராஜின் தம்பியாவாா். கனகசபை ஏலச் சீட்டும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தாா்.

வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5ஆம் திகதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த 4 கடிதங்களை பொலிசார் கைப்பற்றினார்கள். அதில், தனது தற்கொலைக்கான காரணம், தற்கொலைக்குத் தூண்டியவா்களின் விவரங்களைக் கூறியிருந்தாா்.

இதனிடையில் இது குறித்து பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், கடன் பிரச்சனையால் தனது தம்பி தற்கொலை செய்யவில்லை என்றும் அவரது வீட்டை அபகரிக்கும் வகையில் சிலா் அளித்த மிரட்டலால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தாா்.

மேலும் கனகசபையின் தற்கொலைக்குப் பின்னால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது தழுதழுத்த குரலில், அரசியல்வாதிகள் நம்மை விட புத்திசாலிகள் என்றார் ஆனந்தராஜ்.

இதையடுத்து ஏற்கெனவே பதிந்த தற்கொலை வழக்கை பொலிசார் தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி விசாரித்தனா்.

இதில் திடீர் திருப்பமாக கனகசபையின் இன்னொரு அண்ணன் பாஸ்கா் (எ) அண்ணாமலை (56), அவரது மகன் சிவச்சந்திரன் (30) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கனகசபை தற்கொலை தொடர்பில் மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.